487 இடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடக பால் கூட்டமைப்பில் காலியாக இருந்த 487 இடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update:2023-03-19 02:50 IST

பெங்களூரு:

கர்நாடக பால் கூட்டமைப்பில் காலியாக இருந்த 487 இடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

487 பணி இடங்களுக்கு தேர்வு

கர்நாடக பால் கூட்டமைப்பில் பல்வேறு பணி இடங்கள் காலியாக இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 20-ந் தேதி, கர்நாடக பால் கூட்டமைப்பில் காலியாக இருந்த 487 பணி இடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு ஏஜென்சி தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. கடந்த மாதம் (பிப்ரவரி) 20 முதல் 28-ந் தேதி வரை நேர்முக தேர்வும் நடைபெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து, காலியாக இருந்த 487 பணி இடங்களுக்கும், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த நிலையில், பால் கூட்டமைப்பில் காலியாக இருந்த பணி இடங்களில் வேலைக்கு சேர்ந்த 487 பேரும் லஞ்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

நியமன ஆணை வழங்க தடை

குறிப்பாக ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பால் கூட்டமைப்பில் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 487 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி சிக்பள்ளாப்பூர் உள்பட 5 பால் கூட்டமைப்புகள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 487 பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 487 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க கர்நாடக பால் கூட்டமைப்புக்கு தடை விதித்திருப்பதுடன், 487 பேரின் பட்டியலையும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்