மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: "பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்" - பிரதமர் மோடி

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2023-09-21 17:41 GMT

Image Courtacy: SANSADTV

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நடந்த காரசார விவாதத்துக்கு பின்னர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 2 எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. நடப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும்..

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த சூழலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேறியது. மாநிலங்களவையில் இருந்த அனைத்து எம்.பி.க்களும் (215) மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேற்ற நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதநிலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாநிலங்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் பேசிய அவர், "அனைத்து உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், 'நாரி சக்தி'யை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன. நாட்டுக்கு வலுவான செய்தியை வழங்குவோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்