பெங்களூருவில் அரசு பஸ் மோதி பெண் பரிதாப சாவு

ஆடைகள் வாங்குவதற்கு வந்தபோது அரசு பஸ் மோதியில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-06-04 21:27 GMT

பெங்களூரு:

ெபண் சாவு

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் வசித்து வந்தவர் லதா. இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் ஸ்கூட்டரில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் பகுதிக்கு வந்தார். அப்போது அவரும், அவரது கணவரும் ஒரே ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களது மகள், உறவினருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தாள். அவர்கள் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் அவர்கள் திரும்பியபோது, எதிரே பின்நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்கூட்டரை நிறுத்த முயன்றனர். எனினும் அவர்களது ஸ்கூட்டர் அரசு பஸ் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சாலையில் விழுந்த லதா மீது அரசு பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.

மெஜஸ்டிக்கிற்கு...

இதில் லதா பலத்த காயமடைந்து குடும்பத்தினர் கண்முன்னே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து உடனடியாக உப்பார்பேட்டை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஹெப்பால் பகுதியில் இருந்து ஆடைகள் வாங்குவதற்காக மெஜஸ்டிக்கிற்கு வந்ததும், அப்போது விபத்தில் சிக்கி லதா உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய பஸ், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்