திருப்பதி அருகே கார் கவிழ்ந்து பெண் என்ஜினீயர் பலி; திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய சென்றபோது பரிதாபம்
திருமணத்திற்கு மண்டபம் முன் பதிவு செய்வதற்காக சென்றபோது திருப்பதி அருகே கார் கவிழ்ந்து காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் பலியானார்.
திருப்பதி:
தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மூத்த மகள் பிரியங்கா (வயது 30). எம்.இ. படித்துள்ளார். கடந்த வாரம் பிரியங்காவிற்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை திருப்பதி அல்லது திருமலையில் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தனர். பிரியங்கா திருமணத்திற்கு பின்னர் அவரது கணவருடன் அமெரிக்கா செல்ல இருந்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக பிரியங்கா, அவரது பெற்றோர்கள் மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் நேற்று முன்தினம் சொகுசு காரில் திருப்பதிக்கு சென்றனர். காரை பிரியங்காவின் தந்தை செல்வம் ஓட்டி சென்றார்.
நகரி வரை செல்வம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் நகரியில் இருந்து பிரியங்கா காரை ஓட்டிச் சென்றார். திருப்பதி மாவட்டம் வடமாலப்பேட்டை மண்டலம் அஞ்சேரம்மன் கோவில் அருகில் சென்றபோது அங்கிருந்த வேகத்தடை அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பெற்றோர்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தப்பினர். சித்தப்பாவின் மகன் ராஜூவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வடமாலப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடமாலப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.