பெங்களூருவில் பெண் கொடூர கொலை; குற்றவாளியை விரைந்து கைது செய்ய தேசிய மகளிராணையம் வலியுறுத்தல்

கர்நாடகாவின் பெங்களூருவில் பெண் கொடூர கொலை வழக்கில் 3 நாட்களுக்குள் ஒரு விரிவான அறிக்கையை வழங்கும்படி போலீசாருக்கு தேசிய மகளிராணையம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2024-09-23 09:36 GMT

புதுடெல்லி,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாளிகாவல் என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த பகுதியருகே வசித்தவர்கள் இதுபற்றி போலீசிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அந்த உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் வேறு மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்து வசித்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, மோப்ப நாய் குழு மற்றும் கைரேகை குழுவினர் இவற்றுடன் தடய அறிவியல் குழுவினரும் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. போலீசார் சென்றபோது, உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்தது. இதில், அந்த பெண் மகாலட்சுமி (வயது 29) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், தேசிய மகளிராணையம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், வியாளிகாவல் பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவரின் உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு பிரிட்ஜ் ஒன்றில் வைக்கப்பட்ட கொடூர மரணம் பற்றிய ஊடக தகவல் ஒன்று எங்களுடைய கவனத்திற்கு வந்தது என தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்ய கர்நாடக போலீசாருக்கு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதுபற்றிய ஒரு விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், சந்தேகத்திற்குரிய முதன்மை குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம் என்று பெங்களூரு காவல் ஆணையாளர் தயானந்தா இன்று கூறியுள்ளார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. இதுதவிர கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்து உள்ளது.

கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா இன்று கூறும்போது, இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்திற்குரியவர் மேற்கு வங்காள மாநில நபர் என தெரிய வந்துள்ளது. எனினும், கூடுதல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

டெல்லியில் 2022-ம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண் அவருடைய காதலர் அப்தப் அமீன் பூனாவாலா (வயது 29) என்பவரால் கொலை செய்யப்பட்டார். வாக்கரின் உடலை 35 துண்டுகளாக ஆக்கி குடியிருப்பு பகுதிக்கு அருகே பூனாவாலா வனப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்