பஸ் பயணிகளிடம் நகை திருடிய தமிழக பெண் கைது

கொள்ளேகாலில் சக்தி திட்டத்தை பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் நகை திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-17 02:40 IST

கொள்ளேகால்:

கொள்ளேகாலில் சக்தி திட்டத்தை பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் நகை திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பஸ் பயணிகளிடம் திருட்டு

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டு வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொள்ளேகால் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர்தான் அதிகளவு தங்க சங்கிலி பறிப்பு நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் தங்க சங்கிலி திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக பெண் ஒருவரை கொள்ளேகால் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த செல்வி (வயது 60) என்று தெரியவந்தது.

இலவச பஸ் பயணம்

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் கூட்ட நெரிசலை அதிகமாக இருந்துள்ளது. அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்க சங்கிலியை பறித்து வந்துள்ளார். அதாவது அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி தங்க சங்கிலி திருடி வந்துள்ளார். நேற்று முன்தினம் பஸ் கண்டக்டர் அடையாள அட்டையை சோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணிடம் தமிழ்நாடு அடையாள அட்டை இருந்தது.

அதை கைப்பற்றி விசாரித்தபோது, பஸ்களில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து வந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கைதான அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 57 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான பெண் மீது கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்