அமெரிக்க ஆப்பிளுக்கு கூடுதல் வரி வாபஸ்: மத்திய அரசு நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

அமெரிக்க ஆப்பிள், வால்நட், பாதாம் பருப்பு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு இருந்த கூடுதல் வரியை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.;

Update:2023-09-13 08:10 IST

புதுடெல்லி,

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு 50 சதவீத வரியும், வால்நட்டுக்கு 100 சதவீத வரியும், பாதாம் பருப்பு மீது கிலோவுக்கு 100 ரூபாயும் மத்திய அரசு வரி விதித்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு, குறிப்பிட்ட இந்திய உருக்கு மற்றும் அலுமினியம் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது.

அதற்கு பதிலடியாக, அமெரிக்க ஆப்பிள், வால்நட்டுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியுடன் கூடுதலாக 20 சதவீத வரியும், பாதாம் பருப்புக்கு கூடுதலாக கிலோவுக்கு 20 ரூபாயும் மத்திய அரசு விதித்தது.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து விதிக்கப்பட்டு வரும் இந்த கூடுதல் இறக்குமதி வரியை மத்திய வர்த்தக அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது. ஆப்பிள், வால்நட், பாதாம் உள்பட 8 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்திய உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரிஉயர்வை குறைக்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டதால், இம்முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில், மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பிறகு, இமாசலபிரதேசம், காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்போதுதான் ஆப்பிள் விவசாயம் தலை எடுத்துள்ளது. ஆனால் அந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்துள்ளார். இறக்குமதி வரியை குறைத்து, அமெரிக்காவுக்கு பரிசு அளித்துள்ளார்.

'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு' என்ற அவரது முழக்கம் என்ன ஆனது? அமெரிக்காவை திருப்திப்படுத்த ஏன் இந்த சலுகை அளிக்கப்பட்டது? இம்முடிவை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் இந்த முடிவை திரும்பப்பெறுமாறு கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்