எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பதில்

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 21:45 GMT

துமகூரு,

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது பாலியல் பலாத்கார புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வருகிற 15-ந் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

தற்போது எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெற வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அவர் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். வால்மீகி வளா்ச்சி வாரிய நிதி முறைகேடு தொடர்பாக எஸ்.ஐ.டி. போலீசார் தவறு செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலைய வளாகத்தில் ஊடகத்தினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது பற்றி எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன். ஒருவேளை அவ்வாறு தாக்குதல் நடைபெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்