காங்கிரசின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவாரா சோமண்ணா?

Update: 2023-05-04 22:53 GMT

சாதி அரசியலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் சாம்ராஜ்நகர். இந்த மாவட்டத்தில் சாம்ராஜ்நகர், கொள்ளேகால், ஹனூர், குண்டலுபேட்டை என 4 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் சாம்ராஜ்நகர் தொகுதியில் வீட்டு வசதித்துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான வி.சோமண்ணா போட்டியிடுகிறார். சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரசின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மந்திரி புட்டரங்கஷெட்டி கடந்த 2008, 2013, 2018 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றுள்ளார். இதனால் அவரை எதிர்த்து வி.சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்தும் வி.சோமண்ணா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வலுவாக இருக்கும் சாம்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா கால் பதிக்க பலமான வேட்பாளரான சோமண்ணாவை அக்கட்சி களமிறக்கி உள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரை லிங்காயத் மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். அந்த வாக்குகளை குறிவைத்தே லிங்காயத் சமூகத்தின் பலம் வாய்ந்த தலைவரான சோமண்ணா சாம்ராஜ்நகரில் போட்டியிடுகிறார். லிங்காயத் சமூகத்துக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்கஷெட்டியை சார்ந்த தலித் சமூக மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். இதனால் சித்தராமையாவின் சிஷ்யனான புட்டரங்கஷெட்டி 4-வது முறையாக இங்கு வெற்றி பெற திட்டம் வகுத்து வந்தார்.

சாம்ராஜ்நகர் தொகுதியை பொறுத்தவரை இதுவரை 12 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், பா.ஜனதா, ஜனதா கட்சி, சுயேச்சை தலா ஒருமுறையும், வாட்டாள் நாகராஜ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். சாம்ராஜ்நகர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,09,494 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,02,588 ஆண்களும், 1,06,891 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 15 பேரும் அடங்குவர்.

ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மல்லிகார்ஜுன சாமி போட்டியிடுகிறார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த இவரை, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி மந்திரி சோமண்ணா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சோமண்ணாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமூகத்தின் வாக்குகள் சிதறாமல் தனக்கு கிடைக்க மல்லிகார்ஜுன சாமியை அவர் வாபஸ் பெற கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜிம் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே சாம்ராஜ்நகர் ெதாகுதியில் 1989, 1994, 2004 ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ள புட்டரங்கஷெட்டி, வாக்கு வங்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தலித், சிறுபான்மையினர், உப்பாரா சமூகங்களின் வாக்குகள் அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டும் சரியான வளர்ச்சி பணிகள், உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காததது, புட்டரங்கஷெட்டிக்கு பின்னடைவாக உள்ளது.

சோமண்ணா பா.ஜனதாவின் வலுவான லிங்காயத் தலைவராக களமிறங்கிறார். சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கும் அவர், சாம்ராஜ்நகருக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தொகுதியின் லிங்காயத் சமூக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சார்ந்தவர் இல்லை என்பதும், தொகுதி மக்களால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதும், சாம்ராஜ்நகரில் பா.ஜனதாவுக்குள் உட்கட்சி பூசல் நிலவுவதும் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் வருணாவில் சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிடுவதால் அங்கு அதிக கவனம் செலுத்தும் சோமண்ணா, சாம்ராஜ்நகரில் குறைவான நேரத்தை செலவிடுவதும் அவருக்கு பின்னடைவாக இருக்கலாம்.

தற்போது காங்கிரஸ் கோட்டையாக உள்ள சாம்ராஜ்நகரில் கடந்த 3 தேர்தல்களில் புட்டரங்கஷெட்டி குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். சித்தராமையாவின் சிஷ்யனான புட்டரங்கஷெட்டிக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பலமான தலைவரை பா.ஜனதா களமிறக்கி உள்ளதால், அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

ஆண்டு ெவற்றி தோல்வி

1972 புட்டசாமி(காங்.)-24,218 பசப்பா(என்.சி.ஓ.)-22,764

1978 பசப்பா(ஜனதா கட்சி)-36,389 புட்டசாமி(காங்.)-20,511

1983 புட்டசாமி(காங்.)-34,607 வாட்டாள் நாகராஜ்(சுயே.)-28,690

1985 புட்டசாமி(காங்.)-33,335 பரசிவப்பா(ஜனதா கட்சி)-25,625

1989 வாட்டாள் நாகராஜ்(சுயே.)-35,642 புட்டசாமி(காங்.)-29,749

1994 வாட்டாள் நாகராஜ்(கே.சி.வி.பி.)-28,334 புட்டசாமி(காங்.)-22,352

1999 குருசாமி(பா.ஜ.க.)-46,300 வாட்டாள் நாகராஜ்(கே.சி.வி.பி.)-28,781

2004 வாட்டாள் நாகராஜ்(கே.சி.வி.பி.)-37,072 மஞ்சுளா(காங்.)-26,589

2008 புட்டரங்கஷெட்டி(காங்.)-42,017 மகாதேவ்(பா.ஜ.க.)-39,405

2013 புட்டரங்கஷெட்டி(காங்.)-54,440 மல்லிகார்ஜுனப்பா(க.ஜனதா)-43,244

2018 புட்டரங்கஷெட்டி(காங்.)-75,963 மல்லிகார்ஜுனப்பா(பா.ஜ.க.)-71,050

Tags:    

மேலும் செய்திகள்