எனது முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி

மாநாட்டுக்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் சந்திப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2024-06-14 01:24 IST

புதுடெல்லி,

அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ெஜர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள், ஜி-7 நாடுகள் என்ற அமைப்பை நடத்துகின்றன. தற்போது, இதன் தலைமை பொறுப்பில் உள்ள இத்தாலி, ஜி-7 வருடாந்திர மாநாட்டை இத்தாலியில் நடத்துகிறது.

இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா சொகுசு விடுதியில் நேற்று மாநாடு தொடங்கியது. நாளை (சனிக்கிழமை)வரை மாநாடு நடக்கிறது.

இந்தியா உள்பட 12 வளரும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.

அதை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். அதற்காக நேற்று அவர் இத்தாலி புறப்பட்டு சென்றார். 3-வது முறையாக பிரதமர் ஆன பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.

இத்தாலி புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பின்பேரில், 14-ந்தேதி ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறேன். 3-வது முறையாக பிரதமர் ஆன பிறகு எனது முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் ஆகிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். தெற்கு உலக நாடுகள் நலனுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன். கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் 2 தடவை இந்தியாவுக்கு வந்தது, இருதரப்பு உறவுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

இருதரப்பு உறவை உத்திசார்ந்ததாக வலுப்படுத்த பாடுபடுவோம். மாநாட்டுக்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்