இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்- அமித் ஷா
தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என அமித் ஷா கூறினார்.;
ஐதராபாத்,
தெலுங்கானாவில் அடுத்த மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாவில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிர சமிதி, பா.ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், மேடக் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா கூறியதாவது: - தெலுங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஊழலில் மூழ்கியுள்ளன. காளேஸ்வரம் ஊழல் முதல் நிலமோசடி வரை டிஆர்எஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை, காங்கிரஸ் கட்சி விசாரிக்கவில்லை.
டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோர்த்து மக்களை ஏமாற்றுகின்றன. மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுங்கள் அவர் தெலுங்கானாவை ஊழலில் இருந்து விடுவிப்பார். காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் கொண்டு வந்த முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது" என்றார்.