சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் லிங்காயத் தலைவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படுமா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படுமா? என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.

Update: 2023-04-20 22:05 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

லிங்காயத் சமூகம்

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் லிங்காயத் தலைவர்கள் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. அதில் சில தலைவர்கள் பேசும்போது, லிங்காயத் சமூக தலைவர்களுக்கு பா.ஜனதா அநீதி இழைத்துள்ளதாக காங்கிரசர் பிரசாரம் செய்து வருவதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திாி பதவி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் ஆலோசனை கூறினர்.

தலைவர்களின் இந்த உணர்வுகளை கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். பா.ஜனதா வெற்றி பெற்றால், லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கனகபுராவில் உள்ள மிலிட்டரி ஓட்டலில் இருந்து பா.ஜனதா வேட்பாளர் ஆர்.அசோக் பிரசாரம் தொடங்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். நாங்கள் அங்கிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்.

மன்னிக்க மாட்டார்கள்

அதில் உள்ளூர் தலைவா்கள் கலந்து கொள்வார்கள். அங்கு மந்திரி ஆர்.அசோக் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார். இதில் என்ன தவறு உள்ளது. கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி மாவட்ட, தாலுகா மட்டத்தில் நடைபெறுகிறது. 1967-ம் ஆண்டு முதல் இதுவரை காங்கிரஸ் கட்சி லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்கவில்லை.

வீரேந்திர பட்டீல் 9 மாதங்கள் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அவர் எந்த காரணமும் இன்றி திடீரென்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை நீக்கும் முடிவு விமான நிலையத்தில் இருந்தபடி அறிவிக்கப்பட்டது. மேலும் ராஜசேகர மூர்த்தியும் காங்கிரஸ் மிக மோசமாக நடத்தியது. லிங்காயத் சமூகத்தை உடைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. அதனால் காங்கிரஸ் கட்சியை லிங்காயத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மேலும் காஙகிரஸ் கட்சி, தலித், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும் ஏமாற்றியுள்ளது.

நிலையற்ற தன்மை

வருணாவில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவுக்கு சொந்த பலம் இருந்தால் வெற்றி பெறட்டும் அல்லது தோல்வி அடையட்டும். எனது தொகுதியில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஒன்றாக கைகோர்த்து செயல்படுகிறது. ஆனால் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. அது எனது வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஆனால் வருணா தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சித்தராமையாவின் குற்றச்சாட்டு சரியல்ல. எனது தொகுதியில் யார்-யாருடன் கூட்டு சேர்ந்தாலும், நான் வெற்றி பெறுவது உறுதி. சித்தராமையாவுக்கு அவரது தொகுதியில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்