தண்ணீர் தொட்டியில் தள்ளி மனைவி கொலை; காவலாளி கைது
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் கவனிக்க முடியாமல் தண்ணீர் தொட்டியில் தள்ளி மனைவியை கொன்ற காவலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.
தலகட்டபுரா:
தண்ணீர் தொட்டியில்....
பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட துரஹள்ளி 80 அடி சாலையில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் காவலாளியாக சங்கரப்பா (வயது 60) என்பவர் வேலை செய்தார். இவரது மனைவி சிவம்மா (50). இவர்கள் 2 பேரும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு அறையில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையானார். அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சங்கரப்பா தான் சிவம்மாவை கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவம்மாவை தூக்கி சென்ற சங்கரப்பா கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிடித்து தள்ளினார். இதில் தண்ணீரில் மூழ்கி சிவம்மா இறந்தார்.
கைது-பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் தலகட்டபுரா போலீசார் விரைந்து சென்று சிவம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கரப்பாவை பிடித்து விசாரித்தனர். அப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிவம்மாவை கவனிக்க முடியாததால் அவரை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ததை சங்கரப்பா ஒப்புக்கொண்டார்.
இதனால் சங்கரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை, கணவனே கொலை செய்த சம்பவம் தலகட்டபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.