எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

Update: 2024-11-27 06:46 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் நேற்று முன் தினம் துவங்கியது. அப்போது அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், காலை 11.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் வைத்து, அதானி விவகாரம் பற்றி இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மக்களவை எம்.பி. ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்பு, அவை மீண்டும் கூடியது.

அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. அதானி குழுமத்துடன் தொடர்புடைய லஞ்ச விவகாரம் பற்றியும் அவையில் உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அதுபற்றி பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனால், அவையில் கூச்சலும், குழப்பமும் காணப்பட்டது. இதேபோன்று உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் ஆகியவை பற்றியும் அவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

எனினும், தொடர் அமளியால், அவையின் தலைவரான ஜெகதீப் தங்கார், அவை சீராக இயங்கவில்லை என கூறி, நாள் முழுவதும் அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அவை விதியின் கீழ், 18 நோட்டீசுகளை தங்கார், நிராகரித்து விட்டார். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனால், அவை மீண்டும் நாளை காலை 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று, அவை நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை.

நாடாளுமன்ற மக்களவையில், மணிப்பூரின் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேடுக்கு அரசு பொறுப்பேற்று, அமைதி மற்றும் நீதியை மீண்டும் கொண்டு வர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதானி விவகாரமும் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்