அதானி மீது வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது என்று கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகள் தொடர்பாக கவுதம் அதானி, சாகர் அதானி ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனைத்தொடர்ந்து, அதானி இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அவை திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளன என்று அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதானி கிரீன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் மூத்த நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறையின் கீழ் லஞ்சம் கொடுத்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், குற்றப்பத்திரிகையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, உத்தரவாத மோசடி மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை தங்கள் தரப்பினர் எதிர்கொள்கின்றனர் என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில், குற்றச்சாட்டுகள் நிதி மற்றும் உத்தரவாத மோசடிகளை உள்ளடக்கியிருந்தாலும், லஞ்சம் அல்லது வெளிநாட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன்படி, எங்கள் இயக்குநனர்கள் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எப்சிபிஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறும் ஊடகக் கட்டுரைகள் தவறானவை என்று விளக்கமளித்துள்ளது.
உத்தரவாத மோசடி சதி, நிதி மோசடி மற்றும் உத்தரவாத மோசடியை உள்ளடக்கிய 5 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் எதிர்கொள்ளும் கவுதம் அதானி, சாகர் அதானி அல்லது வினீத் ஜெயின் ஆகியோர் "நீதியைத் தடுக்கும் சதி"யில் இடம்பெறவில்லை என்று அந்த நிறுவனம் விளக்கி உள்ளது.
மேலும் ரஞ்சித் குப்தா, சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் உள்ளிட்ட கனேடிய நிறுவன முதலீட்டாளரான அசூர் பவர் மற்றும் CDPQ உடன் தொடர்புடைய தனிநபர்கள் ஆகியோர் மட்டுமே லஞ்ச குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளில் அதானி நிர்வாகிகள் யாரும் பெயரிடப்படவில்லை என்றும் அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.