'கமிஷன்' குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கூறும் முதல்-மந்திரி, ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - டி.கே.சிவக்குமார் கேள்வி
கமிஷன் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கூறும் முதல்-மந்திரி, ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேவையான ஏற்பாடுகள்
பெங்களூருவில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின பேரணி நடத்தினோம். இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்று கருதி எங்கள் கட்சி தொண்டர்கள் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்தினர். இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் உதவியது. அதனால் மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
அன்றைய தினம் மெட்ரோ ரெயில்களில் 8 லட்சம் பேர் பயணித்தனர். பயணிகளின் எண்ணிக்கையில் இது புதிய சாதனை ஆகும். 40 சதவீத கமிஷன் குறித்து பிரதமர் மோடிக்கு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடிதம் எழுதி ஓராண்டு ஆகிறது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தற்போது அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.
பயப்படுவது ஏன்?
அப்படி என்றால் அந்த சங்க தலைவர் கெம்பண்ணா மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?. தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் பயப்படுவது ஏன்?. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். குற்றச்சாட்டுக்கு ஆளான ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரத்தில் விசாரணை முடிவடையும் முன்னரே அவருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். ஈசுவரப்பாவை மீண்டும் மந்திரிசபையில் சேர்க்க அவர் முயற்சி செய்கிறார். அன்ன பாக்கிய திட்டத்தை நிறுத்துவதாக உணவுத்துறை மந்திரி உமேஷ்கட்டி கூறியுள்ளார். உணவு உரிமை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.