கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?; ராகுல் காந்தி கேள்வி

கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-04-17 22:24 GMT

பெங்களூரு:

பிரசார பொதுக்கூட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜெய் பாரத் என்ற பெயரில் கோலாரில் நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரதமர் மோடியை கடுமையாக குறை கூறி பேசினார்.

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி நேற்று காலை தனி விமானம் மூலம் பீதருக்கு சென்றார். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

அரசியல் சாசன அந்தஸ்து

ஐதராபாத்-கர்நாடகா அதாவது கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் பயன் அடைந்துள்ளனர். காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இவை பெரும் பணக்காரர்களுக்கானது அல்ல.

பிரதமர் மோடி அதானிக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்பட இந்தியாவின் வளங்களை வழங்கியுள்ளார். பிரதமருக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு என்று நான் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். பா.ஜனதா ஊழல்களை பற்றி நான் கேள்வி எழுப்பினேன். அதைத்தொடர்ந்து எனது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். அதானியின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று கேட்டேன்.

வாய் திறக்கவில்லை

அதன் பிறகு என்னை பேச அனுமதிக்கவில்லை. எனது மைக்கை அணைத்துவிட்டனர். நாடாளுமன்றத்தில் ஊழல் குறித்து நான் கேள்வி எழுப்பியதால் பா.ஜனதாவினர் பயந்துவிட்டனர். அதனால் தான் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கிவிட்டனர். கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்கள் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினா். இதுவரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அது ஏன்?.

சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கர்நாடக சோப்பு நிறுவன முறைகேடுகள் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி, தான் ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்கிறார். கர்நாடகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. 40 சதவீத கமிஷன் பெறும் பா.ஜனதாவுக்கு இந்த முறை தேர்தலில் 40 இடங்களை மட்டுமே கர்நாடக மக்கள் வழங்க வேண்டும். 40 சதவீத கமிஷன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ள இந்த பணத்தை கொண்டு மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவார்கள்.

சாதிவாரி மக்கள்தொகை

அதனால் கர்நாடக மக்கள் ஊழலுக்கு எதிராக, 40 சதவீத கமிஷனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட வேண்டும். மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற அளவை நீக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து பேசும் மோடி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட மாட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம்.

பீதர் பசவண்ணரின்(12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி) கர்ம பூமி. யாராவது முதலில் ஜனநாயகம் குறித்து பேசினார்கள் என்றால், அது பசவண்ணர் தான். அவர் தான் ஜனநாயகத்திற்கான வழியை காட்டினார். ஆனால் இன்று பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஜனநாயகத்தை தாக்கி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. பசவண்ணரின் சம பங்கு, சம வாய்ப்புகளை வலியுறுத்திய பசவண்ணரின் இந்த கொள்கைகள் மீது பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்துகிறது.

உயர்ந்த பணக்காரர்கள்

பசவண்ணரின் கொள்கைகளை காக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். இந்தியாவில் அவர்கள் வெறுப்பையும், வன்முறையைும் பரப்புகிறார்கள். அவர்கள் ஏழை மற்றும் நலிவுற்ற மக்களின் பணத்தை எடுத்து உயர்ந்த பணக்காரர்கள் 2, 3 பேருக்கு அதை வழங்குகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி.

அவ்வாறு காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை, 2 ஆண்டுகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3,000, டிப்ளமோ படித்தோருக்கு தலா ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம், அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

தவறான வாக்குறுதிகள்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், கருப்பு பணத்திற்கு எதிராக போர் தொடுப்பதாகவும் பிரதமர் மோடி கூறியது போல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தவறான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்காது. நாங்கள் எப்போதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். காங்கிரசில் முதல்-மந்திரியாக யார் வந்தாலும், முதல் நாளிலேயே காங்கிரசின் உத்தரவாதம் சட்டமாக இயற்றப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவரும், பால்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்