தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் விவகாரத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? - பிரியங்கா காந்தி
நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வால் ரேவண்ணா சீரழித்துள்ளார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். மோடி ஆதரித்த வேட்பாளர் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? என்று பதிவிட்டுள்ளார்.