'இந்த திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை யார்?' - எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து முன்னாள் பா.ஜ.க. மந்திரி ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்

எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என முன்னாள் பா.ஜ.க. மந்திரி ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2023-06-23 20:52 IST

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே என மொத்தம் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். தொடர்ந்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், "நிதிஷ் குமார், பாட்னாவில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தில் மாப்பிள்ளை (பிரதமர் வேட்பாளர்) யார்?. அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்