நீர்வீழ்ச்சியில் 'செல்பி' எடுத்தபோது தவறி விழுந்த வாலிபரின் உடலை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்

அரசினகுண்டே நீர்வீழ்ச்சியில் கால் தவறி விழுந்த வாலிபரின் உடலை மல்பே நீச்சல் வீரர்களை கொண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-07-26 18:45 GMT

உடுப்பி-

அரசினகுண்டே நீர்வீழ்ச்சியில் கால் தவறி விழுந்த வாலிபரின் உடலை மல்பே நீச்சல் வீரர்களை கொண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா கொல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசினகுண்டே நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த சரத்குமார் (வயது 23) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக வந்திருந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதையடுத்து சரத்குமார் தனியாக நீர்வீழ்ச்சியின் அருகே நிற்பதுபோன்று வீடியோ சூட் எடுக்க முயன்றார். அதாவது சரத்குமார் நீர்வீழ்ச்சியை பார்ப்பதுபோன்று நண்பர்கள் வீடியோ சூட் செய்தனர். அப்போது பாறையில் நின்ற சரத்குமார் கால் வழுக்கி கீழே விழுந்தார்.

உடலை தேடும் பணியில் தீவிரம்

இதில் நீரில் அடித்து செல்லப்பட்ட சரத்குமார் மாயமானார். நண்பர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கொல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் சரத்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சரத்குமார் கிடைக்கவில்லை. இருப்பினும் போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், சித்ரதுர்காவை சேர்ந்த மீட்பு குழுவினர் உதவியுடன் சரத்குமாரின் உடலை தேடினர். ஆனால் அவர் உடல் எங்கு கரை ஒதுங்கியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து உடல் தண்ணீரில் சிக்கியிருக்க கூடும் என்று போலீசார் கருதியுள்ளனர். இதனால் நீரில் மூழ்கும் பயிற்சி பெற்ற வீரர்களை வைத்து, சரத்குமாரின் உடலை மீட்க முடிவு செய்தனர்.

மல்பே நீச்சல் வீரர்கள்

இதற்காக மல்பேவை சேர்ந்த நீச்சல் வீரர்களை வரவழைத்தனர். 3-வது நாளான நேற்று அவர்கள் அரசினகுண்டே ஆற்றில் இறங்கி சரத்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சரத்குமாரின் உடல் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர். இது கான்போரின் நெஞ்சையும் கரையும்படி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்