ஆதித்யா எல்.1 விண்கலம் என்னென்ன ஆய்வுகள் செய்யும்? முழு விவரம்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றிய படி சூரியனை பற்றி பல்வேறு தகவல்களை இந்த விண்கலம் அனுப்ப உள்ளது.;
ஸ்ரீஹரிகோட்டா,
சூரியனை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பயணித்து சூரியனின் லக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 127 நாட்கள் பயணித்து இந்த சாதனையை ஆதித்யா எல் 1 விண்கலம் செய்துள்ளது. சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம் என்னென்ன ஆய்வுகள் செய்யும் என்பது பற்றி பார்க்கலாம்;
சூரியனை பூமி சுற்றிவரும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நிகழும் விளைவுகளை முன்கூட்டியே பூமியில் இருந்து அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே சூரியனின் படங்களை ஆதித்யா எல்-1, பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியனின் பல்வேறு கோணங்களின் படங்களையும் ஆதித்யா விண்கலம் அனுப்ப உள்ளது. இதனால், விண்வெளியில் உலவும் செயற்கைக்கோள்களை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய 7 வகையான கருவிகள் விண்கலத்தில் உள்ளன. ஆதித்யா விண்கலம் பயணிக்கும் போதே ஹெல் 1 ஓஎஸ், ஏபெக்ஸ் சூட் ஆகிய சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் ஏற்படும் மாற்றங்களை மீதமுள்ள கருவிகள் ஆராயும்.