பிரதமர் மோடியின் ஊர்வலத்தால் நோயாளிகள், மாணவர்களின் கதி என்ன?

பெங்களூருவில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தால் நோயாளிகள், மாணவர்களின் கதி என்ன? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2023-05-05 21:08 GMT

பெங்களூரு:-

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாது

கர்நாடகத்தில் 40 சதவீத பா.ஜனதா ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. எல்லாவற்றிலும் 40 சதவீத கமிஷன் வசூலிக்கிறார்கள். கமிஷன் கொடுக்காமல் எந்த பணியும் நடைபெறுவது இல்லை. மடங்களுக்கு வழங்கிய நிதியிலும் 30 சதவீத கமிஷன் வசூலித்துள்ளனர். அந்த அளவுக்கு மிக மோசமான ஊழல் ஆட்சி இங்கு நடக்கிறது. பிரதமர் மோடி நாளை(இன்று) பெங்களூருவில் ஊர்வலம் நடத்துகிறார்.

இதனால் நோயாளிகள் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாது. மாணவர்கள் 'நீட்' தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாது. அதனால் நோயாளிகள், மாணவர்களின் கதி என்ன?. இதற்கு பா.ஜனதா பதிலளிக்க வேண்டும். மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அந்த மாநில கவர்னர், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நாட்டின் தலைநகரை விட்டுவிட்டு வருவது சாத்தியமா?.

வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்

தேர்தலை எதிர்கொள்ள கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள் இல்லையா?. டெல்லியில் இருந்து மணிப்பூர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டியது பிரதமரின் கடமை. பிரதமரின் ஊர்வலத்தின்போது, வீடுகளின் மேல் பகுதியிலோ அல்லது தாழ்வாரத்திலோ நிற்க முடியாது. கர்நாடக பா.ஜனதா ரூ.1½ லட்சம் கோடி கொள்ளையடித்து உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் 165 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

தற்போதும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் முக்கியமான வாக்குறுதிகளை முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். காங்கிரஸ் கட்சி சொன்னபடி நடந்து கொள்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். தலித், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை பா.ஜனதா அரசு உயர்த்தியுள்ளது.

வெற்று விளம்பரம்

ஆனால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு, மொத்த இட ஒதுக்கீட்டை உயர்த்த மாட்டோம் என்று கூறியுள்ளது. தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதை செய்யாமல் பா.ஜனதா இட ஒதுக்கீடு விஷயத்தில் வெற்று விளம்பரம் தேடிக்கொள்கிறது. இட ஒதுக்கீடு விஷயம் தொடர்பான பா.ஜனதா விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்