புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை - மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்
பஞ்சாயத்து தலைவர் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை மாலையாக அணிந்த நபர் கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்தார்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் பிரஜாபதி. இவர் தனது கிராம பஞ்சாயத்து தலைவரான கன்கரியா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பஞ்சாயத்து தலைவர் கடந்த 6 மாதங்களாக ஊழலில் ஈடுபடுவதாக முகேஷ் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் கன்கரியா மீது பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த முகேஷ் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து உருண்டு வந்தார்.
பஞ்சாயத்து தலைவர் செய்த ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் என கூறி சில ஆவணங்களையும், ஏற்கனவே புகார் அளித்த மனுக்களையும் மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்தார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.