முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யமாட்டோம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரும் வரை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யமாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறினார்.

Update: 2023-04-25 21:26 GMT

பெங்களூரு:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கர்நாடக பா.ஜனதா அரசு, முஸ்லிம்களுக்கு வழங்கி வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்ைட ரத்து செய்துள்ளது. அந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை லிங்காயத் சமுதாயத்திற்கும், ஒக்கலிகர் சமுதாயத்திற்கும் தலா 2 சதவீதமாக பகிர்ந்து அளித்துள்ளது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை வருகிற 9-ந்தேதி வரை அமல்படுத்த கூடாது என்று நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பசவராஜ்பொம்மை கருத்து

இதுகுறித்து உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கருத்து கூறியதாவது:-

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் லிங்காயத், ஒக்கலிக சமுதாயத்திற்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ேளாம். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு மே மாதம் 9-ந்தேதி வரை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்ைட ரத்து செய்ய கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது.

அநீதி செய்யவில்லை

அதன்படியே நாங்கள் செயல்படுவோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு அடுக்ககட்ட முடிவு எடுப்போம். முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை தான் ரத்து செய்கிறோம். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் 17 உட்பிரிவுகளில் இடஒதுக்கீடு, பிரிவு-1 மற்றும் பிரிவு 2-ஏ ஆகியவற்றில் நாங்கள் மாற்றம் செய்யவில்லை.

இதில் மிகவும் ஏழ்மையானவர்கள் இன்னும் அந்த இரண்டு பிரிவுகளில் உள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதியான பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். முன்பு 4 சதவீதம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், 10 சதவீத பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் முஸ்லிம்களுக்கு எந்த அநீதியும் செய்யவில்லை.

இ்வ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி ஷோபா

இதுகுறித்து மத்திய விவசாய துறை இணை மந்திரி ஷோபா கரந்தலாஜே நிருபர்களிடம் கூறுகையில், "மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. முந்தைய அரசுகள், ஒரு சமுதாயத்தினரை திருப்திப்படுத்தவும், அரசியல் லாபத்திற்காக இந்த இட ஒதுக்கீட்டை அனுமதி வழங்கியுள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்