விண்வெளி பயண திட்டம்; இஸ்ரோ-ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Update: 2024-12-21 10:43 GMT

புதுடெல்லி,

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. அதோடு விண்வெளியில் 'பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்' என்ற ஆய்வு நிலையத்தை கட்டமைக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயண திட்டம் தொடர்பாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(ESA) மற்றும் இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி, ஆய்வு பணிகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொகுதிகளை பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு கூட்டு செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரோ தலைவரும், விண்வெளி துறையின் செயலாளருமான சோம்நாத் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இயக்குநர் ஜோசப் ஆஸ்பாகர் ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உடலியல் ஆய்வுகள், தொழில்நுட்ப விளக்க சோதனைகள் மற்றும் கூட்டு கல்வி திட்டங்களிலும் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்