மத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

Update: 2024-12-21 05:27 GMT

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் நயாபுராவில் பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தின் 2வது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்த வளாகத்தில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வளாகத்தின் 2வது மாடியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெகு நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தினேஷ் (35), அவரது மனைவி காயத்ரி (30), 10 வயது மகள் இஷிகா (10) மற்றும் ஏழு வயது மகன் சிராக் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மஞ்சு யாதவ் கூறுகையில், நயாபுராவில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதே வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்ததாகவும், அவர்களில் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தினேஷ் கட்டிடத்தின் கீழ் தளத்தில் பால் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் அதே வளாகத்தின் 2வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தரைத்தளத்தில் இருந்த பால் கடையில் பற்றிய தீ மளமளவென 2வது மாடியில் பரவியது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்