6.5 கோடி கன்னடர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - மல்லிகார்ஜுன் கார்கே

6.5 கோடி கன்னடர்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.;

Update:2023-05-18 12:26 IST

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் கர்நாடக மாநிலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் முதல்-மந்திரி பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 6.5 கோடி கன்னடர்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "கர்நாடக மக்களுக்கு முன்னேற்றம், நலன் மற்றும் சமூக நீதியை ஏற்படுத்த காங்கிரஸ் அணி உறுதியாக உள்ளது.

6.5 கோடி கன்னடர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்" என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்