'பாபரின் ஆக்கிரமிப்பை அகற்றி ராமர் கோவிலை கட்டினோம்' - அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேச்சு

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான சகோதரத்துவம் பாதிக்கப்படவில்லை என்று ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

Update: 2023-02-04 23:57 GMT

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திரிபுராவில் உள்ள பனாமாலிபூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"எங்கள் அரசு(பா.ஜ.க.) ஆட்சிக்கு வந்தால் ராம ஜென்மபூமியில் ராமர் கோவில் கட்ட தீர்மானித்தோம். ராமர் பிறந்த நிலத்தை பாபர் ஆக்கிரமித்திருந்தார். இன்று பாபரை அகற்றிவிட்டு பிரமாண்ட ராமர் கோவில் கட்ட ஆரம்பித்துள்ளோம்.

மக்களுக்கு முன்பு நம்பிக்கை இல்லை. ராமர் கோயில் கட்ட யாராவது முன்வந்தால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வகுப்புவாத மோதல்கள் உருவாகும் என மக்கள் நினைத்தனர்.

இப்போது பிரதமர் மோடியைப் பாருங்கள். ஒருபுறம், ராமர் கோயில் கட்டப்படுகிறது, மறுபுறம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான சகோதரத்துவம் பாதிக்கப்படவில்லை. இதனால் நாடு முன்னேறி வருகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்