"பேரிடர் அபாயத்தைக் குறைக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்" - பிரதமர் மோடி
இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் (NPDRR) என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில், இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
"கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடலுக்கான மாதிரிகளை உள்நாட்டு தளத்தில் நாம் உருவாக்க வேண்டும். இந்த துறைகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சில நகர அமைப்புகள் பேரிடர் ஏற்பட்ட பிறகு தான் நடவடிக்கை எடுத்தக் தொடங்கும். இனி அவ்வாறு இருக்க முடியாது.
புதிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் போது, பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். மொத்த அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.