நாம் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்; பிரதமர் மோடி உரை

நாட்டில் ஊழலுக்கு எதிராக நம்முடைய முழு பலத்துடன் நாம் போராட வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

Update: 2022-08-15 04:30 GMT



புதுடெல்லி,



நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் ஓராண்டாக சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, நாட்டில் ஊழலுக்கு எதிராக நம்முடைய முழு பலத்துடன் நாம் போராட வேண்டும் என பேசியுள்ளார்.

இன்றைய தினம் நாம் 2 பெரிய சவால்களை சந்தித்து வருகிறோம். அவை, ஊழல் மற்றும் பரிவார்வாத் (சொந்த குடும்பத்தினருக்கு நேர்மையற்ற முறையில் சலுகை வழங்குவது) என குறிப்பிட்டு உள்ளார்.

ஊழலானது, நாட்டை கரையான் போன்று அரித்து கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். தகுதியின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நமது அமைப்புகளின் வலிமையை உணர்வதற்காக, சொந்த குடும்பத்தினருக்கு நேர்மையற்ற முறையில் சலுகை அளிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்