அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளோம்: ஜனாதிபதி பேச்சு
இந்தியா, அனைத்து வடிவிலான கொடிய பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், இங்கிலாந்து வெளிவிவகார மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் அந்த குழுவினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி முர்மு, பயங்கரவாதத்தினால் பல தசாப்தங்களாக இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது.
உலகத்தின் மிக பெரிய ஜனநாயக நாடான, உலகில் மிகவும் வெளிப்படையான மற்றும் பன்முகத்தன்மை சமூகங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
கொடிய பயங்கரவாதத்தின் தீமைகளை, அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்த்து போராட இந்தியா தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளது.
அனைத்து பயங்கரவாத செயல்களையும், அது எந்த வகையான செயல்நோக்கம் கொண்ட போதிலும், சகித்து கொள்ள முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி முர்மு, உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு கட்டமைப்பை வடிவமைப்பதில் சர்வதேச சமூகத்தின் வழிகாட்டும் அணுகுமுறையானது தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு குழுவின் பணி மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி விளக்கி கூறினார்.