தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த தொழிலதிபர் உயிரிழப்பு

தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த தொழிலதிபர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2023-10-23 12:39 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இந்நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய் (வயது 49). தொழிலதிபராக பரக் தேசாய்க்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

இதனிடையே, அகமதாபாத்தில் உள்ள தனது வீடு அருகே கடந்த 15ம் தேதி மாலை பரக் தேசாய் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் பரக் தேசாயை விரட்டியுள்ளன.

தெருநாய்களிடமிருந்து தப்பிக்க பரக் தேசாய் வேகமாக ஓடியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பரக் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பரக்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த பரக் தேசாய்க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பரக் தேசாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பரக் தேசாய் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்