கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...!
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு இடங்களில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி வரை 65.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்தனர்.
கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டதல் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 52.03% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மது அருந்தி வந்த 2 தேர்தல் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று தேர்தல் வாக்குச்சாவடிக்கு செல்ல வந்திருந்த தேர்தல் உதவியாளர்கள் இருவர் மது அருந்தியது தெரியவந்து இருவரும் சிவமொக்கா அரசு மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தி இருவரும் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிமனைக்குச் செல்ல போதையில் அமர்ந்திருந்த போது இதனை கண்ட சக ஊழியர்கள் தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் பெயரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவமொக்கா நகர சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடியான பி எச் சாலை அரசு அறிவியல் திடலில் உள்ள பி யு சி கல்லூரி வாக்குச்சாவடியில் முன்னாள் துணை முதல்-மந்திரி கே எஸ் ஈஸ்வரப்பா, அவரது மனைவி ,அவரது மகன் காந்தேஷ் அவரது மனைவி உள்பட குடும்பத்தினருடன் வந்து வாக்கு அளித்தனர்.
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா தாலுகாவில் உள்ள குன்சேனஹள்ளி வாக்கு சாவடி எண்18-ல் ஆண்களை விட பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வருணா தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 20.99 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.