சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் அசுத்த நீரை குடித்த 80 பேருக்கு வாந்தி-மயக்கம்

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் அசுத்தம் கலந்த நீரை குடித்த 80 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update:2022-06-15 20:58 IST

சிக்கமகளூரு;

80 பேருக்கு வாந்தி-மயக்கம்

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனி 22-வது வார்டு பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை சிறுவர்கள், பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அசுத்த கலந்த குடிநீர்...

இதற்கிடையே தகவல் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் மஞ்சுநாத், மாவட்ட அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மோகன் குமார் உள்ளிட்டோர் வந்து ஆய்வு நடத்தினர். அதில் சாக்கடை கழிவு கலந்த குடிநீரை குடித்ததால் 80 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக ராய்ச்சூரில் அசுத்த குடிநீர் குடித்த 5 பேர் பலியாகி இருந்தனர்.

மேலும் சிவமொக்காவில் அசுத்த குடிநீர் குடித்ததால் ஒரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதேபோல 80 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்