கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள 'விபாசனா தியானம்' உதவுகிறது - பிரதமர் மோடி

நவீன வாழ்க்கையில் ஏற்படும் கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள ‘விபாசனா தியானம்’ உதவி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2024-02-05 04:15 IST

கோப்புப்படம்

மும்பை,

விபாசனா தியான ஆசிரியர் எஸ்.என். கோயங்காவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், "இன்றைய வாழ்க்கை முறையில் இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகள் சாதாரணமாகி விட்டது. அவர்களுக்கு 'விபாசனா தியானம்' பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும். 'ஒரு வாழ்க்கை, ஒரு பணி' என்பதற்கு எஸ்.என். கோயங்கா மிகச்சிறந்த உதாரணம். வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில் அவரது போதனைகளும், சமுதாய நலனுக்கான அர்ப்பணிப்பும் உத்வேகத்தை அளிக்கிறது. மக்கள் ஒன்றாக தியானம் செய்யும் போது அதன் பலன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என அவர் கூறுவார். வளர்ந்த இந்தியாவுக்கு அத்தகைய ஒற்றுமை சக்தி மிகப்பெரிய தூணாக இருக்கும்.

'விபாசனா தியானம்' பண்டைய இந்தியாவின் தனித்துவமான பரிசு. ஆனால் பல தலைமுறைகளாக நாம் அதை மறந்துவிட்டோம். விபாசனா என்பது சுய கண்காணிப்பில் இருந்து சுய மாற்றத்துக்கான பயணம். நாம் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. தியானமும், விபாசனாவும் ஒரு காலத்தில் துறவு வாழ்வின் ஊடகமாக பார்க்கப்பட்டது. தற்போது அது நடைமுறை வாழ்க்கையில் ஆளுமை வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி உள்ளது. நவீன வாழ்க்கையில் ஏற்படும் கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள விபாசனாவில் கற்றுக்கொண்டது உதவி செய்யும்.

நவீன அறிவியலின் தரத்துக்கு ஏற்ப விபாசனா அறிவியலின் ஆதாரங்களை இந்தியா உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 'விபாசனா தியானம்' ஒரு நவீன அறிவியல் ஆகும். நாம் அதை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்