சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
சிக்கமகளூரு அருகே சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு அருகே கரடிஹள்ளி காவல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி கோல்ப் மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கோல்ப் மைதானத்தில் 2 சிறுத்தைகள் சுற்றி வந்துள்ளன. அதில் ஒன்று கருஞ்சிறுத்தை ஆகும். இதனை அந்தப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுத்தைகள் நடமாடியது அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது.
சிறுத்தைகள் நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் கோல்ப் மைதானத்தின் அருகே அந்த சிறுத்தைகள் சுற்றி உள்ளன. கோல்ப் மைதானத்துக்கு ஒரு கார் வந்தபோது, அங்கிருந்து 2 சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடின. இதனால் பீதியில் உள்ள மக்கள், அந்த சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.