விஞ்ஞானிகளுக்கு 'நோபல்' போன்ற புதிய விருது - மத்திய அரசு திட்டம்

விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2022-09-27 23:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தினார். விருதுக்குரியோரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதன் மூலம், விருது மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த பின்னணியில், 8 விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத்துறைகளின் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தற்போது வழங்கப்பட்டு வரும் 300-க்கு மேற்பட்ட விருதுகளை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தனி நன்கொடை விருதுகள், பெல்லோஷிப் மற்றும் உள்விருதுகளை நிறுத்திக்கொள்ளுமாறு கூறினார்.

சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் 51 நர்சுகளுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுமாறு அஜய் பல்லா வலியுறுத்தினார். தேசிய மருத்துவ கவுன்சில் வழங்கி வரும் பி.சி.ராய் விருது உள்ளிட்ட 3 விருதுகளை மறுசீரமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதிக மதிப்பு கொண்ட புதிய விருது ஒன்றை உருவாக்குமாறு கூறினார்.

அதுபோல், தகுதிவாய்ந்த விஞ்ஞானிகளுக்கு 'நோபல்' பரிசு போன்று 'விஞ்ஞான் ரத்னா' என்ற புதிய விருதை உருவாக்கி வழங்குமாறும், இதுதொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருடன் ஆலோசனை நடத்துமாறும் அஜய் பல்லா கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) வழங்கும் சாந்தி ஸ்வருப் பட்நாகர் விருதுகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

37 விருதுகளை ரத்து செய்யுமாறு சுகாதார ஆராய்ச்சி துறையை அஜய் பல்லா அறிவுறுத்தினார்.

தற்போதைய விருதுகளை ரத்து செய்துவிட்டு, அதிக அந்தஸ்து கொண்ட புதிய விருதுகளை உருவாக்குமாறு புவியியல் அமைச்சகம், விண்வெளி துறை, அணுசக்தி துறை ஆகியவற்றுக்கு யோசனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்