கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தட்சிண கன்னடாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு;
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்தது. கோடை மழையால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். தற்போது மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர, மலைநாடு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது.
விடிய, விடிய கொட்டி தீர்த்தது
அதன்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் இரவும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இரவு பெய்த மழை நேற்று காைல வரை விடிய, விடிய பெய்தது.
இடி-மின்னல் சூறைகாற்றுடன் மழை கொட்டியது. மங்களூருவில் பெய்த மழைக்கு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பிடும்படியாக அடையாறு-கண்ணூர் தேசிய நெடுஞ்சாலை,
மங்களூரு-மூடபித்ரி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதேபோல் பண்ட்வால், சுள்ளியா, மூடபித்ரி தாலுகாவிலும் மழை பெய்தது. விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகியது. தொடர் மழைகாரணமாக நேத்ராவதி, குமாரதாரா, பால்குனி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இதைதொடர்ந்து கனமழை காரணமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார்.
ஆனால் சில பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் முன்கூட்டியே சென்றுவிட்டனர். இதனால் அந்த பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
உடுப்பி, உத்தரகன்னடா
இதேபோல் உடுப்பி மாவட்டத்திலும் காபு, கார்கலா பிரம்மாவர், பைந்தூர் மற்றும் உத்தரகன்னடா மாவட்டத்தில் முருடேஸ்வர், கார்வார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அரபிக்கடலில் அலையின் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 4-ந்தேதி வரை மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவில் உள்ள சிவபுராவில் 189 மி.மீட்டர் மற்றும் வர்ணகாவில் 183 மி.மீ. அளவில் நேற்று மழை பெய்தது.அதிகபட்சமாக ஹெப்ரியில் 265 மி.மீ. மழை பதிவானது. ஹெப்ரியில் தான் நேற்று மாநிலத்தில் அதிகளவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.