பேஸ்புக்கில் லைவ் வீடியோ; 'நாம் சாகப்போகிறோம்' 230 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் லாரிக்குள் பாய்ந்த கார் - 4 பேரும் பலி

300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமென சொகுசு காரில் பயணித்த நபர் கூறுவதும் லைவ் வீடியோவாக பேஸ்புக்கில் பதிவாகியுள்ளது.

Update: 2022-10-17 07:01 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ - காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 15-ம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர். பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் இருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர்.

அந்த காரை தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக உள்ள 35 வயதான ஆனந்த் பிரகாஷ் ஓட்டியுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் காரில் சென்றுள்ளனர்.

தங்கள் பயணத்தை காரில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் லைவ்வாக பதிவிட்டுள்ளார். கார் 230 கிலோமீட்டர் வேகத்தை நெருங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. காரில் இருந்த ஒருவர் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி ஆனந்திடம் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அப்போது, காரின் பின் இருக்கையில் இருந்த நபர்களில் ஒருவர் 'நாம் 4 பேரும் சாகப்போகிறோம்' என கூச்சலிடுவதும் அந்த வீடியோவில் கேட்கிறது. அப்போது, காரை ஓட்டிய ஆனந்த், வளைவு இல்லாத பகுதியை பார்த்தால் நான் வேகத்தை கூட்டுவேன் அனைவரும் சீட் பெல்ட் அணிந்துகொள்ளுங்கள்' என கூறுவதும் பேஸ்புக் லைவ் வீடியோவில் பதிவாகியுள்ளது.

2 நிமிடத்திற்கு மேல் அந்த வீடியோ பேஸ்புக்கில் லைவாக பதிவாகியுள்ளது. 230 கிலோ மீட்டர் வேகத்தை நெருங்கிய நிலையில் பேஸ்புக் நேரலையை நிறுத்தியுள்ளனர். அதன் பின் சிறிது நேரத்தில் சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது.

மின்னல் வேகத்தில் சென்ற கார் லாரிக்குள் பாய்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இத்திலேயே உயிரிழந்த நிலையில் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கார் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்