தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது - பன்வாரிலால் புரோகித்

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்ததாக பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-21 19:21 GMT

சண்டிகர்,

பஞ்சாப்பின் லூதியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சத்பீர் சிங் கோசல் என்பவரை அம்மாநில அரசு நியமித்தது. இந்த நியமனம் சட்டவிரோதமானது எனவும் அவரை நீக்கக் கோரி முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு அம்மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது.

தமிழகத்தின் கவர்னராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் இதுபோன்ற பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் கல்வியின் தரம் மேம்படுவதை நான் பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்களின் பணிகளில் கவர்னர் தலையிடுகிறார் என்று பஞ்சாப் அரசு கூறுகிறது. பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?

அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன்.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பன்வாரிலால் புரோகித், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழகத்தின் கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்