பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்குகிறது- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தகவல்
பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை ஜூலை மாதம் தொடங்குகிறது என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை ஜூலை மாதம் தொடங்கும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார்.
வந்தே பாரத் ரெயில்
இந்திய ரெயில்வே துறை வந்தே பாரத் என்ற பெயரில் அதிவேக ரெயில் சேவை வழங்கி வருகிறது. அதாவது சென்னை-மைசூரு, வாரணாசி-டெல்லி, மும்பை-காந்திநகர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தேபாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் அதிவேகமாக செல்லக்கூடியது. இந்த ரெயில் பெட்டிகளில் அதி
நவீன வசதிகள் உள்ளன. முற்றிலும் குளுகுளு வசதி கொண்டது. இது தான் இந்திய நாட்டின் அதிவேகமாக செல்லக்கூடிய ரெயில் ஆகும். இது அதிகபட்சமாக 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடத்திற்குள் இயங்கும் வகையில் ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை வருகிற ஜூலை மாதம் தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஜூலையில் தொடங்கும்
பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை ஜூலை மாதத்தில் தொடங்கும். இதன் மூலம் கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது. இதுகுறித்து ரெயில்வே மந்திரியுடன் நான் நேரில் ஆலோசனை நடத்தினேன்.
இந்த ரெயிலை இயக்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன. உப்பள்ளி-தார்வார் இரட்டை மாநகர மக்கள் விரைவில் இந்த அதிநவீன ரெயில் சேவையின் அனுபவத்தை பெற உள்ளனர்.
இவ்வாறு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.