நீட் தேர்வில் சாதிக்க விரும்பிய மாணவியை 6 மாதங்களாக அடைத்து வைத்து பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் கைது

சித்திக் வேறொரு பயிற்சி மாணவியை, பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலான பின்னர், அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

Update: 2024-11-10 00:23 GMT

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு தயாராக விரும்பியுள்ளார். இதற்காக கான்பூர் நகரில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். அப்போது, அவரை 6 மாதங்களாக அடைத்து வைத்து 2 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

2022-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த சம்பவம் தொடர்ந்துள்ளது. அப்போது சிறுமிக்கு 17 வயது. இதுபற்றி உதவி காவல் ஆணையாளர் அபிஷேக் பாண்டே கூறும்போது, உயிரியல் படிப்புக்கான ஆசிரியர் சாஹில் சித்திக் (வயது 32), வேதியியல் படிப்புக்கான ஆசிரியர் விகாஸ் பொர்வால் (வயது 39) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் 2 பேருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், முறைகேடாக வீட்டில் அடைத்து வைத்தல், குற்ற உள்நோக்கம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

அந்த புகாரில், 2022-ம் ஆண்டு டிசம்பரில் புது வருட கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கல்யாண்பூரில், மக்தி-கேரா பகுதியில் உள்ள நண்பரின் பிளாட்டுக்கு வரும்படி சித்திக் அந்த மாணவியை அழைத்துள்ளார். மற்ற மாணவிகளும் வருவார்கள் என கூறியுள்ளார்.

விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி பிளாட்டுக்கு சென்றபோது, சித்திக் தவிர யாருமில்லை. இதன்பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்து, சித்திக் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.

தொடர்ந்து 6 மாதங்களாக பிளாட்டில் சிறை வைத்து, மாணவியிடம் சித்திக் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு யாரிடமும் கூறினால் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார். சில மாதங்களில், ஆசிரியர் பொர்வாலும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை பற்றி போலீசிடம் கூறினால், அது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என மாணவி பயந்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பின்னர், கான்பூருக்கு வந்து மகளை அவருடைய தாய் அழைத்து சென்றிருக்கிறார்.

தொடக்கத்தில் போலீசுக்கு போக தயக்கம் காட்டிய அந்த மாணவி, இதன்பின்பு, வேறொரு பயிற்சி மாணவியை, சித்திக் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலாகியது. இதனை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வழக்கில், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்தே மாணவி போலீசில் புகார் அளிக்க துணிந்துள்ளார்.

இதன்பின்னர், கல்யாண்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த எப்.ஐ.ஆர் ஒன்று பதிவாகி உள்ளது. இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்