'மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி மக்களிடம் பொய்களை பரப்பியது' - யோகி ஆதித்யநாத்
மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பியது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பியது. ஆனால் மக்களின் உணர்வுகளுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டனர்.
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதே 'இந்தியா' கூட்டணியின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அதை நிறைவேற்றியது.
அதன் விளைவாக இந்த நாடு பயங்கரவாதத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காஷ்மீர் பண்டிதர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மோடி அரசாங்கம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, மக்களிடையே பாதுகாப்பு உணர்வை உருவாக்க முயற்சி செய்து வருகிறது."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.