உத்தரகாண்ட் பனிச்சரிவு - மேலும் 10 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-10-07 22:24 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு, அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் கடந்த 4-ந் தேதி ஏறியது.

இவர்கள் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தபோது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப்படை என பெரும் படை களமிறக்கப்பட்டது. பனிச்சரிவில் சிக்கிக்கொண்ட பெரும்பாலானோர் உயிரிழந்து விட்டனர்.

இதில் நேற்று முன்தினம் வரை 16 உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளின் பலனாக நேற்று முன்தினம் இரவில் 3 உடல்கள், நேற்று 7 உடல்கள் என மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து விட்டது.

இதில் 24 பேர் பயிற்சி பெறுவோரும், 2 பேர் பயிற்சியாளர்களும் ஆவர். இன்னும் 3 பேரை காணவில்லை என பயிற்சி மையம் கூறியுள்ளது. அவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்