'இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேசம் உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேச மாநிலம் உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
கடந்த 7 ஆண்டுகளில் உத்தர பிரதேச மாநிலம் 6-வது மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்து 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"உத்தர பிரதேச மாநிலத்தில் சுமார் 90 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ல் இந்தியாவின் 6-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உத்தர பிரதேசம் இருந்த நிலையில், தற்போது இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியால் உத்தர பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலீட்டுக்கு சாதகமான சூழல், தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.