உத்தர பிரதேசம்: ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
உத்தர பிரதேசத்தில் சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் நேபாள நாட்டு எல்லையையொட்டிய ருபைதிஹா பகுதியில், நேபாள்கஞ்ச் சாலை ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியை நோக்கி 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், போலீசார் மற்றும் சஹஸ்திர சீம பால் படையினர் கூட்டாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து உள்ளனர்.
ஜியாவுல் ஹக் மற்றும் சிராஜ் என்ற அந்த 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்திய வம்சாவளியான அவர்களை விசாரணைக்காக போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
இதில், அவர்களிடம் 140 கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.