ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

Update: 2023-09-08 17:49 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளும், இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ள அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது இருதரப்பு சந்திப்பின் போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனிடையே, ஜோ பைடனை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்." என்று அதில் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்