யுபிஎஸ்சி தேர்வில் தளர்வுகள் வழங்க கோரி 7 நாட்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்த தேர்வர்கள் முடிவு

வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது போன்ற கோரிக்கை வலியுறுத்தி டெல்லியில் மகா சத்தியாகிரகம் நடத்த தேர்வர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-24 10:34 GMT

புதுடெல்லி,

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது மற்றும் 2010 சிசாட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்வர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 19 தொடர் போராட்டங்களைத் தேர்வர்கள் தொடங்கி உள்ளனர். நவம்பர் 26 அன்று "மகா சத்தியாகிரகம்" என்ற மாபெரும் இயக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஏழு நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படும் என்றும் கூடுதல் முயற்சி அறிவிக்கப்படும் வரை மகா சத்தியாகிரக இயக்கம் தொடரும் என்றும் இது மத்திய அரசு மீது அழுத்தத்தை உருவாக்குவதற்கான எங்களின் முயற்சி என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுவரை 300 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நவம்பர் 26 அன்று, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 500 மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

யூபிஎஸ்சி தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பாக தற்போது உள்ள விதிகளை மாற்றுவது சாத்தியமில்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்