ஆதார் அட்டையில் ஆவணங்களை புதுப்பியுங்கள்- பொது மக்களுக்கு, ஆதார் ஆணையம் வலியுறுத்தல்

பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தப்படுகிறது.

Update: 2022-12-24 20:18 GMT

புதுடெல்லி,

ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பர் 9ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு அதை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். மை ஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனிலும் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்றும் தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளை வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவும். எனவே பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்