மனைவி இறந்த சோகத்தில் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!
உத்தரப்பிரதேசத்தில் மனைவி இறந்த சோகத்தில் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பரூகாபாத்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரூகாபாத் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கஞ்ச் பகுதியில் மனைவி இறந்த சோகத்தில் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அர்ரா பஹர்பூர் கிராமத்தில் உள்ள பாபு சிங் இன்டர் கல்லூரியின் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுனில் என்கிற தர்மேந்திரா (வயது 38). இந்த நிலையில் இன்று தர்மேந்திரா அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அவரது இரண்டு மகள்கள் ஷகுன் (வயது 7), சிருஷ்டி (வயது 11) ஆகியோரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தர்மேந்திராவின் மனைவி இறந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், நேற்று இரவு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், 'நான் இரு மகள்களுடன் என் மனைவியிடம் செல்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.